குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் - Malaysiakini

போலீஸ் தடுப்புக் காவலில் மரணமுற்ற குகனின் உடல் கிடத்தப்பட்ட பொன் நிற மெர்சடீஸ் பென்ஸ் காரைப் பின்தொடர்ந்து 500 பேர் கொளுத்தும் வெயிலையும் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னேரம் மணி 2 அளவில் பெட்டாலிங் ஜெயா மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலிருந்து ஊர்வலம் சுமார் 20 கிமீ தொலைவிலுள்ள பூச்சோங், இந்து மயானத்தை நோக்கி புறப்பட்டது.

சிறிது தூரம் நடந்தபின் கூட்டத்தினர் அவர்களுடைய வண்டிகளில் ஏறி சவம் ஏற்றப்பட்டிருந்த பென்ஸ் காரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

தென்இந்திய வழக்கப்படி சவப்பெட்டி வாழை இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காரில் ஏற்றப்பட்டு குகன் மரணமடைந்த போலீஸ் நிலையத்திற்குச் சென்று, பின்னர் சடங்குகள் செய்து அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முதல் சவப் பரிசோதனையில் அவருடைய நுரையீரலில் தண்ணீர் கோர்த்திருந்ததால் குகன் இறந்ததாகக் கூறப்பட்ட மருத்துவ அறிக்கையை குகனின் கும்பத்தினர் நிராகரித்ததைத் தொடர்ந்து இரண்டாவது பரிசோதனை மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நடைபெற்றது.

ஏராளமான செய்தியாளர்கள் - வெளிநாட்டு செய்தியாளர்கள் உட்பட - பின்தொடர எல்டிபி நெடுஞ்சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் சுமார் 80 நிமிடங்களுக்குப்பின் சுபாங், தைப்பான் போலீஸ் நிலையத்தை சென்றடைந்தது.

அந்தப் போலீஸ் நிலையத்தில்தான் உடலில் கடுமையான காயங்களுக்கு ஆளான 22 வயதான அந்த இளைஞர் மயக்கமுற்று விழுந்து இறந்து போனார்.
அப்போலீஸ் நிலையத்தின்முன் ஊர்வலமாகச் சென்ற கூட்டத்தினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்து கொண்ட இன்னொரு பெரிய கூட்டத்தினர் இரண்டு நிமிடங்களுக்கு பிராத்தனை செய்ததுடன் போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கும் சுலோகங்களை முழங்கினர். அதன் பின்னர், ஊர்வலத்தைத் தொடர்ந்தனர்.

அங்கு 20 போலீஸ் சேமப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஹெலிக்கோப்டர் உயரே சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால், அசம்பாவங்கள் எதுவும் நடக்கவில்லை.

ஊர்வலம் செல்லும் வழியில் பத்து 14, தேவான் செபாரங்கான் பூச்சோங் முன் போலீஸ் சேமப் படையினரின் இன்னொரு ஒன்பது வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஊர்வலம் பூச்சோங், கம்போங் பத்து 14 லில் உள்ள மயானத்தைச் சென்றடைந்தது. வழியில் போக்குவரத்து நிலைகுத்தியது. வாகனங்களில் பயணம் செய்தவர்கள் ஒலி எழுப்பி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

அந்நேரத்தில் கூட்டத்தினரின் எண்ணிக்கை 1000 க்கு மேலாகியது.
இறுதியில், சில சடங்குகள் மற்றும் பிராத்தனைக்குப்பின் மாலை மணி 5.30 க்கு குகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அறுவர் கைது செய்யப்பட்டனர்

இதற்குமுன் காலையில் மலாயாப் பல்கலைக்கழக மருத்திவ மையத்திற்குச் செல்லும் சாலைகளை ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பே போலீசார் மூடினர்.

அறுவர் கைது செய்யப்பட்டனர்: மூவர், தடை செய்யப்பட்டிருக்கும் இண்ட்ராப் இயக்கத்தின் டி-சட்டையை அணிந்து இருந்தனர் என்பதற்காக; இன்னும் இருவர், போலீஸ் தடையை மீறி சவக்கிடங்கினுள் நுழைய முயன்றனர் என்பதற்காக.

கைது செய்யப்பட்டவர்களில் இண்ட்ராப் இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் ஆர்.எஸ், தினேந்திரனும் ஒருவர்.

ஆறாவதாகக் கைது செய்யப்பட்டவர் கொலை சம்பந்தமாக சந்தேகிக்கப்பட்டவர் என்று போலீஸ் ஐஜிபி மூசா ஹசான் பின்னர் கூறினார்.
சொகுசு கார்கள் களவாடலில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட குகன் ஜனவரி 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் ஐந்து நாள்களுக்குப்பின் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது மரணமடைந்தார்.

குகனின் சவ அடக்கத்தை ஓர் அரசியல் கூட்டமாக்கக் கூடாது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் காலிட் அபு பாக்கர் ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் சவ அடக்கத்திற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் கூறினார்.

சவ அடக்கத்தில் கலந்து கொண்ட இதர தலைவர்களில் பினாங்கு துணை முதலமைச்சர் பி. ராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கோபிந்த் சிங் டியோ, ஆர். சிவராசா, எம். மனோகரன், தெராசா கோக் மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்குவர்.
பொதுமக்கள் எழுப்பிய கடும் கண்டனத்தைத் தொடர்ந்து சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் இவ்வழக்கை கொலை என்று வகைப்படுத்தினார். இவ்வழக்கு பற்றிய விசாரணைகள் முடிவுற்றுள்ளன.
குற்றவாளிகள்மீது வழக்கு தொடரப்பட வேண்டும்
“இன்றைய சவ அடக்கம் போலீஸ் அத்துமீறலால் ஏற்பட்ட கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்”, என்று சிவராசா கூறினார்.

“மக்கள் நீதி கோருகிறார்கள். அரசாங்கம், குகனின் மரணம் முழுமையாக விசாரிக்கப்படுவதை, குற்றவாளிகள்மீது வழக்கு தொடரப்படுவதை, அவர்கள் தப்பித்துவிடாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்”, என்று அவர் எஎப்பியிடம் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர், தனேந்திரன் கைதுகள் நியாயமற்றவை என்று அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போலீஸ் நிலையத்திலிருந்து கூறினார்.

“நாங்கள் செய்ததெல்லாம், போலீசாரின் அத்துமீறலால் இறந்து போன ஒருவரின் சவ அடக்கத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை தெரிவிக்க வந்ததுதான். இது மலேசிய அரசாங்கம் அதன் மக்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு, மரியாதை கொடுப்பதில்லை என்பதைக் காட்டுகிறது”, என்று தொலைபேசி வழியாகக் கூறினார்.

சவ அடக்கத்தில் தனது மனைவி மற்றும் அவர்களுடைய மூன்று குழந்தைகளுடன் கலந்து கொண்ட 38 வயதான பொறியியலாளர் பீட்டர் செல்வநாயகம் குகனின் மரணத்தை சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகப் பின்பற்றப்படும் வேறுபாட்டுடன் இணைத்துக் கூறியவர்களில் ஒருவராவார்.
“இந்திய சமூகத்தினருக்கு எதிரான அநீதியை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதைக் காட்டுவதற்காக எனது குடும்பத்தினரும் நானும் இங்கு வந்திருக்கிறோம். குற்றவாளிகள்மீது வழக்கு தொடரப்பட வேண்டும். அவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப விடக்கூடாது”, என்று அவர் கூறினார்.

Comments

Kacang Hijau said…
tak fahamlah saudara sofi
Anonymous said…
woi orang luar, mcm mane ko berdakwah ni, untuk org keling. bodoh punyer orang luar ni.