1MALAYSIA : TAMIL ADA MANDARIN PUN ADA

கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அந்தத் தாக்குதல்கள் இஸ்லாத்திற்கு புறம்பானவை என்று அறிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் வாங்சா மாஜுவில் உள்ள மெட்ரோ டபர்னக்கெல் தேவாலயத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்ட பின்னர் அந்த பழமைப் போக்குடைய முஸ்லிம் அறிஞர் நிருபர்களிடம் பேசினார்.

அந்தத் தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டது “அறிவில்லாதது” என்றும் அவர் சொன்னார்.

“சண்டைகளில் கூட வழிபாட்டு இடங்களை நாசப்படுத்துவதிலிருந்து முஸ்லிம்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். நாம் அமைதியாக வாழ்கின்ற நாளில் இப்போது ஏன்? என்று அவர் வினவினார்.

அந்தத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் உண்மையில் சமயப்பற்று உள்ளவர்களா என்பது எனக்குத் தெரியாது”, என்று ஹாடி மேலும் கூறினார். அவருடன் கட்சித் துணைத் தலைவர் நசரூதின் மாட் ஈசாவும் சென்றிருந்தார்.

அந்த மூன்று தேவாலயத் தாக்குதல்களில் கடுமையாகச் சேதமடைந்த அந்த மெட்ரோ டபர்னக்கெல் தேவாலயத்திற்கு இன்று பல பக்காத்தான் தலைவர்கள் வருகை புரிந்தனர்.

அந்தத் தாக்குதலில் மூன்று மாடிகளைக் கொண்ட அந்த தேவாலயக் கட்டிடத்தின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகம் முற்றாக சேதமடைந்து விட்டது. ஆனால் அந்தக் கட்டிடத்திற்கு விரிவான சேதம் ஏற்பட்டிருப்பதால் அதனைப் பயன்படுத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

மாலை 5 மணி வாக்கில் பிரதமர் நஜிப் அந்த தேவாலயத்திற்கு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. கத்தோலிக்க நாளேடான ஹெரால்ட் தனது பாஹாசா மலேசியா பதிப்பில் “அல்லாஹ்” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதித்த பின்னர் சமய உணர்வுகளைத் தூண்டி விடுவதாக அவரது அம்னோ கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Comments